புதுடில்லி: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட செம்மர கட்டைகள், சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு கடத்தப்பட இருந்தது என தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து டில்லி போலீசார் நடத்திய திடீர் சோதனையில், ரூ.6 கோடி மதிப்பிலான 10 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி வனப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகள் கிடங்கில் இருந்து மாயமானது. இதுகுறித்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்தக் கட்டைகள் டில்லியில் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு டில்லி போலீசார் சிறப்பு குழுவை அமைத்து சோதனை நடத்தினர்.

அதில், டில்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் 10 டன் செம்மர கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த இர்பான் மற்றும் மஹாராஷ்டிரா தானே பகுதியைச் சேர்ந்த அமித் பவார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. செம்மர கடத்தல் வலைப்பின்னலுக்கு எதிராக ஆந்திரா மற்றும் டில்லி போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.