சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முக்கியமான உரையை நிகழ்த்தினார். இந்த அமைப்பு 2001ஆம் ஆண்டு சீனா மற்றும் ரஷ்யா தலைமையில் உருவாக்கப்பட்டது. அதன் முதன்மை நோக்கமாக பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான போராட்டம் இருந்தது. தற்போது இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஜெய்சங்கர் தனது உரையில், சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை குறிப்பிட்டு, இது சுற்றுலாத் துறையையும் சமூக ஒற்றுமையையும் சேதப்படுத்தும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்டது என்றார். இது மதவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டும் செயல் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டித்து, அதில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த அமைப்பு தனது ஆரம்ப நோக்கங்களுக்கே உண்மையாக இருந்து பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த அமைப்பின் நோக்கத்தை பலப்படுத்தும் வகையில், உறுப்பினர்கள் ஒருமித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநாட்டிற்கு முன்னதாக சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை ஜெய்சங்கர் சந்தித்தார். அவரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததுடன், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்தார். இது 2020ல் லடாக்கில் ஏற்பட்ட இடையூறு பிறகு, அவருடைய சீனப் பயணமாகும்.