மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சரத் பவார் மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1978-ல் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் இளைய முதல்வர் (38 வயதில் பதவியேற்றார்) என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு 4 முறை மகாராஷ்டிர முதல்வர் பதவியை அலங்கரித்தார்.
அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். 1999-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) தொடங்கினார். 2004-ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) இணைந்து மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 2019-ல் UPA கட்சியில் இருந்து வரும் சரத் பவார் பெரும் பின்னடைவை சந்தித்தார். 2019 சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை அமைத்தது.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே 2022-ல் சிவசேனா கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் கட்சியை உடைத்து விட்டு மஹாயுதி என்ற கூட்டணியை உருவாக்கி, பாஜக மற்றும் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியையும் அடைந்தார். இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையமும் அஜித் பவாரின் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறியது. இதையடுத்து மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய இரு கட்சிகள் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனவே, 83 வயதான சரத்பவாருக்கு இந்த சட்டசபை தேர்தல் பெரும் நெருக்கடியாக பார்க்கப்பட்டது. சரத் பவார் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவார் தலைமையிலான என்சிபி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது மகாராஷ்டிரா அரசியலில் சரத் பவாருக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலில் 54 இடங்களில் வெற்றி பெற்ற சரத் பவாரின் கட்சி தற்போது 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரசை உடைத்து, பெரும்பாலான தலைவர்கள், எம்எல்ஏக்களை அஜித் பவார் கைப்பற்றியதால், சரத்பவாருக்கு இந்த நிலை வந்துள்ளது. எனவே, 2024 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சரத்பவாரின் எதிர்கால அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.