பெங்களூரு: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறியதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.
தற்போது வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, “கர்நாடகம் கேரளாவுடன் நிற்கிறது. கர்நாடக அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவோம்.
ஒன்றிணைந்து செயல்படுவோம், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார். சித்தராமையாவின் முடிவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளனர். வயநாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் தாராளமாக ஆதரவளித்த கர்நாடக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதற்கான உங்கள் உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும்தான் வயநாட்டிற்குத் தேவையான பலம்” என்று ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.