பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மக்கள் வாழ்க்கையை சிரமத்தில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக வெளிவட்ட சாலையில் உள்ள இப்பலூர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த நிலையை சமாளிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், விப்ரோ வளாகம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதித்தால், உச்ச நேரங்களில் (Peak Hour) சுமார் 30 சதவீதம் நெரிசலை குறைக்க முடியும் என்று போக்குவரத்து நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். இதனால் உற்பத்தித் திறனும், நகர்ப்புற வாழ்க்கை தரமும் மேம்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விப்ரோ வளாகம் வழியாக வாகன போக்குவரத்தை சாத்தியமாக்குவதற்கான வழிகளை உங்கள் குழுவினர் எங்கள் அதிகாரிகளுடன் ஆலோசித்து ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டுக்கொண்டார். இது செயல்படுத்தப்பட்டால், பெங்களூருவின் போக்குவரத்து சிக்கல் தீர்க்கப்படுவதில் ஒரு முக்கிய முன்னேற்றம் காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சிலர், “முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளின் அருகே உள்ள நெரிசலை அவர்கள் வீட்டு வளாகம் வழியாக அனுமதிப்பார்களா?” என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். எனினும், போக்குவரத்து சிக்கலைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சி என்ற வகையில் இந்த கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது.