கர்நாடகாவில், ”ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நிச்சயம் அமல்படுத்தப்படும். எந்த சந்தேகமும் வேண்டாம்,” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூரில், அவர் சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா, தலித் சமூகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ”நான் முதல்வர் ஆன முதல் நாளில் இருந்து, சுரண்டப்பட்ட தலித் சமூகத்தின் நலனுக்காக பணியாற்றி வருகிறேன். உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுகிறேன். இதுவரை, மக்கள் தொகை அடிப்படையில் தலித் சமூகத்திற்கு பட்ஜெட்டில் 24 சதவீதம் மேம்பாட்டு நிதி ஒதுக்க சட்டம் இயற்றினோம். ஆனால் இந்த சட்டத்தை மத்திய அரசு மற்றும் பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை,” என்று கூறினார்.
”அரசு பணிகளில் 1 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்களில், தலித் சமூகத்தை சேர்ந்த கான்ட்ராக்டர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தவர்கள் நாங்கள் தான். தற்போது, இந்தத் தொகையை 2 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இதை பரிசீலிப்பேன்,” என்றார்.
அவர், ”ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வரும் நாட்களில் நிச்சயமாக அமல்படுத்தப்படும். இது அறிவியல்பூர்வமாக தயாரிக்கப்பட்டு, அரசின் திட்டங்களுக்கு உதவியாக அமையும். எங்கள் அரசு ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என அனைவரையும் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
”ஜாதி அமைப்பால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மையால் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். சில சிக்கல்கள் காரணமாக, நாடோடி சமூகத்திற்கு ஆணையம் அமைப்பது சாத்தியம் இல்லை. இருப்பினும், பட்ஜெட்டில் அந்த சமூகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.