போபால்: பறவைக் காய்ச்சல் காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா சந்தை 21 நாட்களாக மூடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள சந்தையில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இருந்த பறவைகள் மற்றும் பூனைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சோதனையின் முடிவில், அங்கு இருந்த 3 பூனைகள் மற்றும் ஒரு பறவைக்கு ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (HBAI) எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த வகை காய்ச்சல் 2022 இல் அமெரிக்காவில் தோன்றியது மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவுகிறது. இதையடுத்து, சிந்த்வாரா சந்தை அடுத்த 21 நாட்களுக்கு மூடப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிந்த்வாரா, கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் துணை இயக்குனர் டாக்டர் எச்.ஜி.எஸ்.பக்ஸ்வார் கூறுகையில், ”பூனைகள் மற்றும் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கடந்த ஜனவரி மாத இறுதியில் தெரியவந்தது. போபாலில் ஆய்வக சோதனைகள் இதை உறுதி செய்தன. இதையடுத்து சிந்த்வாரா சந்தையை மூட உத்தரவிட்டோம். பறவை காய்ச்சல் அறிகுறி உள்ள பறவைகள் மற்றும் பூனைகள் தோண்டி எடுக்கப்பட்டு புதைக்கப்பட்டன,” என்றார்.