
பீஹாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் அமைந்துள்ள, சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஜானகி கோவிலின் புனரமைப்பு பணிகள் ரூ.883 கோடி செலவில் தொடங்கியுள்ளது. இப்பகுதி, மத முக்கியத்துவம் வாய்ந்த புனவுரதம் என அழைக்கப்படுகிறது. கோவிலை புதுப்பிக்கும் திட்டத்துக்கு கடந்த மாதம் 1ஆம் தேதி மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பல அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அயோத்தியிலுள்ள ராமர் கோவிலைப் போல, சீதா தேவிக்கும் பெரும் கோவில் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வரவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள வளர்ச்சி பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இந்த புனரமைப்பு திட்டம், மாநிலத்தின் மத சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அமித் ஷா தனது உரையில், ஜானகி கோவில் புனரமைப்பு இந்திய பாரம்பரியத்தை உயர்த்தும் ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்த திட்டம் முடிந்ததும், சீதாமர்ஹி பகுதி தேசிய மட்டத்தில் ஒரு முக்கிய யாத்திரை தலமாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.