திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளம் மக்களை திணறடித்து வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்ததால் எங்கு பார்த்தாலும் வீடுகள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபுவும் விஜயவாடாவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 10 நாட்கள் தங்கி வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.
மறுபுறம் ஆந்திராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குளங்கள், ஆறுகள் நிரம்பி வருகின்றன. இதனால் பாம்பு, முதலைகளும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.
இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். விஜயவாடாவில் மட்டும் 70 பேர் பாம்பு கடித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஏளூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேறு ஏரி நிரம்பியதால் பல கிராமங்களுக்கு வெள்ள நீர் வந்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, வெள்ளத்தில் சாலையில் வந்த பாம்பு மீன்களை விழுங்க முயன்றது.
ஆனால் அதற்குள் அங்கிருந்தவர்கள் பாம்பை குச்சியால் கொன்று விட்டதால் அந்த மீன் பாம்பின் வாயில் கிடந்தது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலானது.