புது டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்க இயக்குநரகம் 2014-ம் ஆண்டு பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 2015 முதல் விசாரணை நடத்தி வருகிறது. குற்றப்பத்திரிகை கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்களையும் அமலாக்க இயக்குநரகம் சேர்த்துள்ளது.
இந்த வழக்கு நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் காணாமல் போன ஆவணங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, அதை ஆய்வு செய்வதாகக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.