ஸ்ரீநகரில் இருந்து டில்லிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மிகவும் கோபமடைந்தனர். விமான நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களின் நடவடிக்கையை கண்டித்த பயணிகள், ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகாரும் தெரிவித்தனர். விமான நிலைய நிர்வாகம், பயணிகளை சமாதானப்படுத்த நடவடிக்கை எடுத்து, அருகில் உள்ள ஹோட்டலில் தங்கும் வசதியையும் செய்து கொடுத்தது.
தொடர்ந்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தினர் தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்றும், இன்று இரவு 11.30 மணிக்கு விமானம் மீண்டும் இயக்கப்படும் என்றும் அறிவித்தனர். பயணிகள் அதே விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்தச் செய்தி பக்தர்களிடையே அதிருப்தியையும் விமான பயணிகள் பாதுகாப்பு மீதான கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.