புதுடில்லி: பீஹாரில் வாக்காளர் உரிமையை வலியுறுத்தும் வகையில், காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் யாத்திரையைத் துவங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 65 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கியது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மற்றும் லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், வாக்காளர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ராகுலின் யாத்திரைக்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி யாத்திரையில் கலந்து கொள்கிறார்.
இந்த தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார். ஆகஸ்ட் 27ல் முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 29ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆகஸ்ட் 30ல் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு ஆகியோரும் யாத்திரையில் பங்கேற்க உள்ளனர். இதோடு, பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இணைந்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
ராகுலின் யாத்திரை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பீஹாரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.