புதுடெல்லி: இந்தியாவின் விமான நிலையங்களில் இன்று (ஜூலை 20) அதிகாலை 3 மணி முதல் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் 10 மற்றும் 11 இயங்குதளங்கள் நேற்று செயலிழந்ததால், உலகின் பல்வேறு பகுதிகளில் விமானப் புறப்பாடு, வங்கிப் பரிவர்த்தனைகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செய்தி ஒளிபரப்பு ஆகியவை பல மணி நேரம் நிறுத்தப்பட்டன. உலகம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பணத்தைத் திரும்பப் பெறுதல்
இன்று அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்களில் நிலைமை சீரானது. விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட பிரச்சனை படிப்படியாக சீரடைந்து வருகிறது. இன்று மாலைக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம். விமான நிலையங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.