புதுடில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரளாக மக்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பல ரயில் நிலையங்களில் பெரும் நெரிசல் நிலவுகிறது. இந்த நிலையில், ரயில்நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் சுத்தம் குறித்து உறுதி செய்வதற்காக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டில்லி அனந்த் விஹார் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அவர் பயணிகளுடன் பேசினார் மற்றும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள சுத்தப்படுத்தல் மற்றும் வசதி நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டார். அதே சமயம், சமூக வலைதளங்களில் ரயில்வே குறித்து தவறான தகவல்கள் மற்றும் பொய்யான வீடியோக்கள் பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய செயல்கள் ரயில்வே துறையின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதாகவும், இதுபோன்ற வீடியோக்களைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, “பயணிகளின் சவுகரியமும் பாதுகாப்பும் தான் எங்கள் முதல் முன்னுரிமை. ரயில்வே பணிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன. பொய்யான தகவல்கள் அல்லது தவறான வீடியோக்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம். மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு முன், அவர் டில்லி ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தங்குமிடங்களை ஆய்வு செய்ததும், பயணிகளின் தேவைகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறை தற்போது பண்டிகை காலப் பயண நெரிசலை சமாளிக்க கூடுதல் ரயில்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.