கலிபோர்னியாவில் நேற்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய விமானப்படை அதிகாரி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம், சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணித்து திரும்பிய முதல் இந்தியராக வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்த பயண திட்டம் அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு, நாசா மற்றும் இஸ்ரோவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 25ஆம் தேதி, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில் சுபான்ஷு, அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் விண்வெளிக்குப் புறப்பட்டனர். 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டினர்.
433 மணி நேரங்கள் நிலையத்தில் கழித்து, திட்டமிட்டபடி விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. 22 மணி நேர பயணத்துக்குப் பிறகு, இந்திய நேரப்படி மாலை 3:01 மணிக்கு, டிராகன் விண்கலம் கலிபோர்னியா கடற்பரப்பில் பாராசூட் உதவியுடன் பத்திரமாக ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது. மீட்பு குழுவினர் அவர்களை உடனே மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
சுபான்ஷு சுக்லாவின் இந்த சாதனை, ராகேஷ் சர்மா பின் இந்திய விண்வெளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க புதிய துறையாகக் கருதப்படுகிறது. மேலும் இது, இஸ்ரோவின் எதிர்வரும் ககன்யான் மனிதவிண்வெளி திட்டத்திற்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.