தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாந்த்ரா, குர்லா, தாதர், சியோன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சிஎஸ்எம்டி நிலையத்தில் இருந்து தானே வரை புறநகர் ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுனாபட்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மும்பை துறைமுகம் வரையிலான புறநகர் ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை என்பதால் புறநகர் ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்லும் ஊழியர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
புறநகர் ரயில் நிறுத்தப்பட்டதால், பேருந்துகளில் மட்டுமே பயணிப்பதாகவும், அதுமட்டுமின்றி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அதிக கட்டணம் கேட்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிவதால் மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.