புதுடில்லி: இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இணைந்த இண்டி கூட்டணி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை தங்கள் வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் உடல்நலக் காரணத்தால் ராஜினாமா செய்த நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே எண்ணிக்கை நடைபெறும்; வெற்றி பெறும் நபர் அடுத்த ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார்.

மத்திய ஆளும் தே.ஜ., (என்டிஏ) கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தும் தற்போது மகாராஷ்டிரா கவர்னராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர், தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி ஒருமித்த வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
1946ல் ஒருங்கிணைந்த ஆந்திராவில் பிறந்த சுதர்ஷன் ரெட்டி, 1988 முதல் 1990 வரை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகவும், 1995ல் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். 2005ல் அசாம் குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர்.