உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக, சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்; கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வர்த்தகமும் தடுமாறியது. தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, நகரமே குளம்போல் காட்சியளித்தது.

வாரணாசி, காசி என்றழைக்கப்படும் இந்நகரம் ஹிந்துக்களின் ஆன்மிகத் தலைநகரமாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தொகுதியாகவும் விளங்குகிறது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வந்த மோடி, இந்த தொகுதி வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மொரீஷியசின் பிரதமருடன் வாரணாசியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஆனால், இயற்கையின் சோதனையாக திடீர் மேகவெடிப்பு மற்றும் கனமழை ஏற்பட்டதால், நகரின் பல பகுதிகளில் பெருமழை நீர் தேங்கி போக்குவரத்து சீர்குலைந்தது. சாலைகள் அனைத்தும் வெள்ளம் நிறைந்ததால், மக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இவ்வாறான திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகள், நகரின் வடிகால் வசதிகள் போதாமையை வெளிக்காட்டுவதாகவும், எதிர்காலத்தில் மழைநீர் மேலாண்மைக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.