புதுடெல்லி: மலையாள சினிமா உலகில் நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, பல நடிகைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து துணிச்சலாக வெளிப்படையாகப் பேசினர். காவல் துறையிலும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பிரபல மூத்த நடிகர் சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக துணை நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் வெடித்ததால் நடிகர் சங்கத்தில் இருந்து சித்திக் ராஜினாமா செய்தார். செப்டம்பர் 24 அன்று, கேரள உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது, அதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
விசாரணையில் சித்திக் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கேரள காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காதது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இடைக்கால நிவாரணமாக சித்திக்குக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.