மத்திய அரசின் வக்ஃப் சட்ட திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுடன், இந்த புதிய வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கான எதிர்ப்பு வெளிப்படத் தொடங்க, இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகக் கூறி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விசிக, ஆம் ஆத்மி, மஜ்லிஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய பெஞ்ச் பரிசீலனை செய்தது.
விசாரணையின் போது, வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை நியமிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
வக்ஃப் வாரியத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், வக்ஃப் நிலங்களின் கையகப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களில், முக்கிய சட்டவியல் கேள்விகளை உள்ளடக்கிய ஐந்து ரிட் மனுக்களை மட்டுமே விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த வழக்குகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள், வக்ஃப் வாரியம் ஆகியவை ஏழு நாட்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை மே 5ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.