புதுடில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில், 7 நீதிபதிகள் சொந்த கார் இல்லாதவர்கள் என்ற தகவல் வெளியானது. மேலும், ஒரு நீதிபதி தன் சொத்துகளில் பியானோவை குறிப்பிடுவதும் சுவாரஸ்யமாக பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பெருமளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து எழுந்த சந்தேகங்களை தீர்க்க எடுத்த முடிவாகும். இதைத் தொடர்ந்த நீதிபதிகள் கூட்டத்தில், சொத்து விவரங்களை வெளிப்படையாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்ளிட்ட 21 பேர் தற்போது சொத்து பட்டியலை சமர்ப்பித்துள்ளனர். இந்த பட்டியல் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நீதிபதிகள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், நகை, வங்கி வைப்பு, எல்.ஐ.சி., பி.பி.எப். போன்ற பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே மேற்கொண்டுள்ளனர்.
சிலர் வீட்டுக்கடன் பெற்றுள்ளதாகவும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 7 நீதிபதிகளுக்கு சொந்தமாக எந்தவொரு கார் இல்லாததும், மற்றவர்கள் மாருதி ஸ்விப்ட் போன்ற எளிமையான வாகனங்களை தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சஞ்சய் குமார் தன் சொத்துகளில் பேர்ல் ரிவர் பியானோவையும் சேர்த்துள்ளார். இது அவரின் தனிப்பட்ட விருப்பத்தைக் காட்டுகிறது.
பங்குசந்தை முதலீடுகளை நீதிபதிகள் தவிர்த்துள்ளனர். காரணம், அவர்கள் விசாரிக்க வேண்டிய வழக்குகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடையவையாக இருக்கக்கூடும் என்பதால்தான்.
நீதிபதி நரசிம்மா 2008 முதல் 31.5 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். நீதிபதி விஸ்வநாதன் 2010–11 முதல் தற்போது வரை 91.4 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். இருவரும் நீதிபதியாக வருமுன் வழக்கறிஞர்களாகச் செயல்பட்ட காலத்தில் பெரும் வருவாயை ஈட்டியிருந்தனர்.
இந்த சொத்து பட்டியல்கள், நீதிபதிகள் வாழ்க்கைமுறையை வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணங்களாக உள்ளன.