புதுடெல்லி: காஜி, காஜியத், ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மோட்டார் சைக்கிள் மற்றும் வரதட்சணையாக ரூ.50,000 கேட்டு கணவர் துன்புறுத்தியுள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற்றார்.
அதன்பிறகு, அந்த பெண் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், பிரிந்து வாழ்வதற்கு மனைவி தான் காரணம் எனக்கூறி பராமரிப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் பராமரிப்பு கோரிக்கையை நிராகரித்ததால், அந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அஷானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் 2014-ம் ஆண்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி கூறியதாவது:- காஜி நீதிமன்றம், ஷரியா நீதிமன்றம் போன்றவற்றுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது. அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஷரியா நீதிமன்றங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும்.
அவை மூன்றாம் தரப்பினருக்குப் பொருந்தாது. குடும்பநல நீதிமன்றமும், அலகாபாத் உயர் நீதிமன்றமும் இரண்டாவது திருமணம் என்பதால் வரதட்சணை வழங்க முடியாது எனக்கூறி ஜீவனாம்சம் மறுக்கப்பட்டது. இந்த முடிவுகள் அனைத்தும் சட்டபூர்வமானவை அல்ல மற்றும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்தவை. நீதிமன்றம் என்பது சமூகத்திற்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை போதிக்கும் நிறுவனம் அல்ல. கணவன் மனைவிக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 பணம் கேட்டு சித்ரவதை செய்து விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ. 4,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.