வாஷிங்டன்: அமெரிக்க குடிமகனோ அல்லது க்ரீன் கார்டு வைத்திருப்பவரோ திருமணம் செய்வதன் மூலம் குடியுரிமை பெறும் நடைமுறையில் கடுமையான மாற்றங்களை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது. இதுவரை திருமணம் செய்து கொள்ளும் போது குடியுரிமை பெறுவது எளிதாக இருந்த நிலையில், தற்போது அந்த சலுகை முற்றிலும் மாறிவிட்டது.

முந்தைய நடைமுறைகளில், திருமணத்திற்குப் பிறகு அமெரிக்க குடியுரிமை பெறுவது நேரடி மற்றும் சிக்கலற்றதாக இருந்தது. இன்டர்வ்யூ அல்லது தாமதம் இல்லாமல் குடிமகனாக மாற முடிந்தது. ஆனால் தற்போதைய சட்ட மாற்றங்களால், அதற்கான செயல்முறை மிகவும் நீண்டதும், கடுமையான பரிசோதனைகளுடன் கூடியதாக மாறியுள்ளது.
அமெரிக்க குடிமகனாக இருப்பவரின் வாழ்க்கைத் துணைவர், குடியுரிமை பெற ஐ-130 என்ற விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க சுமார் 14 மாதங்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து, இன்டர்வ்யூக்காக மூன்றரை மாதங்கள் கூடுதல் நேரமாக செலவாகும். இதன் மூலம் மொத்தமாக 17 முதல் 20 மாதங்கள் வரையில் இந்த நடைமுறை நீடிக்கும்.
இதே போன்று, க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவியருக்கும் க்ரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் பல கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவர்கள் ‘எப்2ஏ’ என்ற பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவில் இருந்து அனுமதி கிடைக்க சுமார் 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும், ஏற்கனவே அமெரிக்காவில் எச்-1பி வேலைவிசாவில் வசித்து வரும் வாழ்க்கைத் துணைவியர், அதே நாடு உள்ளடக்கிய நேரடி விண்ணப்ப முறையில் விண்ணப்பிக்கலாம். இருந்தாலும், அவர்களும் அமெரிக்க குடியேற்ற துறை அதிகாரிகளால் நேர்முக விசாரணை செய்யப்பட்ட பின்னரே க்ரீன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் மூலம், திருமணத்தின் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் குடியுரிமை முறைமை அதிக கவனத்துடன் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் இது ஒட்டி வெளிப்படுத்துகிறது.