பெங்களூரில் நடைபெற்ற 3வது தமிழ் புத்தக திருவிழாவில் பத்து நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பரபரப்பாக சென்றது. புத்தக வியாபாரிகள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விழாவுக்கான பார்வையாளர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருந்தனர்.

திருவிழாவின் நிறைவு நாளில், பங்கு எடுத்த அனைவரும் ஆனந்தக் கண்ணீருடன் வெளியேறினர். தமிழகத்திலிருந்து வந்த புத்தக வியாபாரிகள், பெங்களூரு தமிழ் மக்கள் தமிழுக்கும், தமிழ் புத்தகங்களுக்கும் கொடுத்த மரியாதையைப் பார்த்து உற்சாகமடைந்தனர்.
தீவிர வாசகர்கள், துண்டுசீட்டில் புத்தகங்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டு, புத்தகங்களை பை நிறைய வாங்கினார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், கலை நிகழ்ச்சிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தியனர். மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சு, நடனம், கவிதை, வினாடி வினா போட்டிகள் அனைத்தும் தமிழை மையமாக கொண்டு நடத்தப்பட்டு, திருவிழாவின் சிறப்பை அதிகரித்தது.
விழாவினை முடித்து, தமிழகத்தில் இருந்து வந்த புத்தக வியாபாரிகள், “நாங்கள் வியாபார நோக்கத்திற்காக வந்தோம், ஆனால் இங்கு தமிழின் மரியாதையைப் பார்த்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது” என்று தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது, “இந்த பத்து நாட்கள் வேறு எந்த மாநிலத்தில் இருந்தாலும், ‘தமிழகத்தில் உள்ளோம்’ என்ற உணர்வு இருந்தது. இது மிகவும் மகிழ்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது.”
திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் பின்வருமாறு பகிர்ந்துள்ளனர்.
அரவிந்த், டான்ஸ் மாஸ்டர், பில்லண்ணா கார்டன் – “நடனம் எனக்கு உயிர் மூச்சு. எனது அப்பாவை பார்த்து கற்றேன். தற்போது பலருக்கு நடன பயிற்சி அளிப்பதில் மகிழ்ச்சி.”
சாண்ட்ரியா, 4ஆம் வகுப்பு, புனித ஜார்ஜ் பள்ளி – “நான் கடந்த ஓராண்டாக பரத நாட்டியம் பயில்கிறேன். தமிழ் மக்கள் முன் ஆடுவது பெரும் சந்தோஷமாக இருந்தது.”
பிரின்சி, 7ஆம் வகுப்பு, புனித அல்போன்சஸ் அகாடமி – “நான் பல மேடைகளில் ஆடியுள்ளேன். இங்கு ஆடுவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.”
தீன தயாளன், 16, கோவிந்தப்பூர் – “எனது தந்தை வீட்டில் ஆடுவது பார்த்து, நான் கற்றுக்கொண்டேன். மைக்கேல் ஜாக்சன் எனக்கு பிடித்த டான்சர்.”
சாந்தி, குடும்பத்தலைவி, கல்யாண் நகர் – “புத்தக திருவிழா சிறப்பாக உள்ளது. எனது மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். புத்தகம் வாசிப்பதில் என் கணவர் வழிகாட்டுவார்.”
சுந்தரவதனன், 83, ஹலசூர் – “எனது படிப்பில் ஜெயகாந்தன் நாவல்கள் மிக பிடிக்கும். கடந்த ஆறு ஆண்டாக, தமிழ் பாடங்களை கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி.”
ஹர்ஷதா, மைக்ரோபயாலஜி முதலாம் ஆண்டு மாணவி, புனித வளனார் பல்கலைக்கழகம் – “ஐந்து ஆண்டுகளாக சிலம்பம் கற்று வருகிறேன். தமிழ் படிக்க ஆசை உள்ளது, ஆனால் போதுமான நேரம் இல்லை.”
புத்தக திருவிழா, தமிழன் பாரம்பரியத்தை விளக்கியும், கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஒரு அருமையான நிகழ்ச்சியாக மாறியது.