புதுடெல்லி: உலகின் பழமையான மொழியான தமிழ் ஒவ்வொரு இந்தியனின் பெருமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்றும், 2025 ஜனவரி 26ஆம் தேதி நமது அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் கூறினார்.
இந்திய மக்களை அரசியலமைப்புச் சட்டத்துடன் இணைக்கும் வகையில் http://Constitution75.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதனைப் பார்வையிட வேண்டும்.
உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், அது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்றும் பிரதமர் கூறினார். உலகில் தமிழ் கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த மாத இறுதியில் இந்திய அரசின் ஆதரவுடன் பிஜியில் தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய கலாச்சாரம் உலகின் மூலை முடுக்கிலும் பரவி வருகிறது, தென் அமெரிக்காவில் உள்ள பராகுவேயில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், அங்குள்ள இந்திய தூதரகத்தில் ஆயுர்வேத ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன, மேலும் இந்த கலாச்சார முயற்சிகள் உலகம் முழுவதும் பரவுகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு எகிப்தில் இந்திய கலாசாரம் தொடர்பான ஓவியப் போட்டியில் 23,000 மாணவர்கள் பங்கேற்றதாகவும், இந்திய கலாச்சாரம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.