பீகாரில் சட்டசபை தேர்தல் சூடு அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் குற்றம் சாட்டியதால் அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. பாட்னாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தனது வாக்காளர் அடையாள எண்ணை காண்பித்த அவர், அதை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவு செய்தபோது ‘ரெகார்டு இல்லை’ என வந்ததாக கூறினார். இது உண்மையெனில், அவர் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் எனக் கேள்வியெழுப்பியதே இந்த விவாதத்திற்குத் துவக்கம்.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், தேஜஸ்வி யாதவின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் 416வது வரிசை எண்ணில் இருப்பதாக தெரிவித்தது. அவரது குற்றச்சாட்டு தவறானது என்றும், அவர் குறிப்பிட்ட எண்ணும் அந்த பட்டியலில் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இதனுடன், விபரங்களை சரிபார்க்க வேண்டிய காலம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 1 வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் அதிகாரப்பூர்வ முறையில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்ட எண்ணும், தேர்தல் ஆணையம் சொன்ன எண்ணும் வேறுபட்டிருந்ததால், உண்மையான நிலை என்னவென்பது குறித்து சரியான விளக்கம் வரவில்லை. இது, பீகார் அரசியலில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இதுவரை 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியான சூழலில், இந்த விவகாரம் எதிர்கால தேர்தல் அரசியலைத் தாக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் தேஜஸ்வியின் குற்றச்சாட்டுகள் நியாயமா, தவறா என்பது தொடர்பான தெளிவான விசாரணை மற்றும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சொன்ன எண்ணும், வாக்காளர் பட்டியலில் காணப்படும் எண்ணும் ஏன் பொருந்தவில்லை என்ற கேள்விக்கு பதில் தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.