புதுடில்லி: நேபாளத்தில் தொடர்ந்து வன்முறை மற்றும் அரசியல் பதற்றம் நிலவுவதால், இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி வரை இந்த நிறுத்தம் அமலில் இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து, சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் பதவி விலகியுள்ளனர். காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து காத்மாண்டுவிற்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காத்மாண்டுவிலிருந்து புறப்படும் விமானங்களும் செப்டம்பர் 10 மதியம் 12 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மாற்று விமானம் தேர்வு செய்யவும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறவும் வாய்ப்பு வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறு அட்டவணைப்படுத்தல் மற்றும் ரத்துசெய்தல் வசதி செப்டம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 அல்லது அதற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளுக்கே இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.