புதுடில்லி: 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு எதிரான வாகன ஓட்டிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, டில்லி அரசு அந்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. முதலில், காற்று தர மேலாண்மை கமிஷன் உத்தரவின் பேரில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க, 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

தலைநகர் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். முதல் இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திடீர் நடவடிக்கையால் பொதுமக்கள் இடையே கோபமும் பதற்றமும் ஏற்பட, பலரும் எதிர்ப்பு போராட்டத்திற்குத் தயாராகி வந்தனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இதனை ஒரு பொதுமக்கள் விரோத நடவடிக்கையாக குற்றம்சாட்டின.
இந்த பின்னணியில், டில்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, காற்று தர மேலாண்மை கமிஷன் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் மூலம், பறிமுதல் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரினார். அவர் கூறுகையில், பெட்ரோல் நிலையங்களில் நிறுவப்பட்ட பழைய வாகனங்களை கண்டறியும் கருவிகள் முறையாக செயல்படவில்லை, ஒலிபெருக்கிகள் கூட வேலை செய்யவில்லை, எனவே நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்புகள் தற்போது இல்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்கும் பணியில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை பறிமுதல் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்படுகிறது. திட்டத்தின் தொடர்ச்சி குறித்து முடிவெடுப்பது காற்று தர மேலாண்மை கமிஷனின் பொறுப்பாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.