ஜம்மு: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்ததாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையின் பின்னணியில், ஜம்மு-காஷ்மீர் அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகளால் பரவலாக செல்லப்படும் 48 இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைத்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்தி இருந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பைசரன் புல்வெளி பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான், எல்லையை அத்துமீறி தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில், இந்தியா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்கள் கருதி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு உளவுத்துறை பல்வேறு முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதிகள், குறிப்பாக வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் திரண்டிருக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன், ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் பிற பொது வசதிகளையும் இலக்காக்க வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் அரசு 87 முக்கிய சுற்றுலா தலங்களில் 48 இடங்களை மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளது. இதில் பத்காம் மாவட்டத்தின் தோடாபத்ரி, அனந்த்நாக் மாவட்டத்தின் வெரிநாக் போன்ற பிரசித்திபெற்ற இடங்களும் அடங்குகின்றன. இந்த முடிவுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி வழியாக கண்காணிப்பு மற்றும் ரோந்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில், ஜோத்பிர் சிங் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு, இந்தியாவில் உள்ள சந்தைகளில் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறினர். இந்த சம்பவம் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குத் தனி பரிமாணம் சேர்த்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஐந்து நாட்களாகவும் இந்திய எல்லையை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. குப்வாரா, பாராமுல்லா, பூஞ்ச், அக்னூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் இந்த அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்று, அக்னூர் பகுதியில் பாக் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்புப் படைகள் கடும் பதிலடி வழங்கின. இந்த தாக்குதல்கள் நிலவியபோதும், மாநிலத்தில் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையில், பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசும் காவல்துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளன.