பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் குறிவைத்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) எச்சரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பதுங்கியிருந்த பீஹாரைச் சேர்ந்த அஹலதுர் முகமது என்ற நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர், தமிழகம், பீஹார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது, பீஹார் இளைஞர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிரியாவில் உள்ள ஐ.எஸ். மற்றும் அல் குவைதா அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீஹாருக்குள் நுழைந்து, அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை சேர்த்துக் கொள்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், பிடிபட்ட இளைஞர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நாடு முழுவதும் போலீசாருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.