மும்பை அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னவிஸை, மஹாராஷ்டிரா நவநிர்மாண சேனா தலைவர் ராஜ் தாக்கரே சந்தித்து பேசியுள்ளார். இது மாநில அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கணிப்புகளை தூண்டியுள்ளது. நீண்ட காலமாக விலகி இருந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்தது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இருவரும் ஒன்றிணைந்த பின்னர், மகாராஷ்டிரா கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் சிவசேனாவும், எம்என்எஸும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், அவர்களுக்கு எந்த இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. ஷஷாங்க் ராவ் தலைமையிலான அணி 14 இடங்களையும், பாஜக கூட்டணி அணி 7 இடங்களையும் கைப்பற்றியது. இந்த தோல்வி, எதிர்கால உள்ளாட்சி தேர்தலுக்கு தாக்கரே சகோதரர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ராஜ் தாக்கரே மற்றும் தேவேந்திர பட்னவிஸ் இடையிலான சந்திப்பு, புதிய அரசியல் மாற்றத்திற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இண்டி கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு கடைசி வரிசையில் இடம் வழங்கப்பட்டது. இதனால், அவரது கட்சி அதிருப்தியடைந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அரசியல் வட்டாரங்களில், தாக்கரே சகோதரர்கள் பாஜகவுடன் இணையும் வாய்ப்பு குறித்து விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இது நடந்தால் மஹாராஷ்டிரா அரசியலில் அடுத்த கட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. அதேசமயம், இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை மாநில அரசியலின் சமநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.