மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று (ஜூலை 5) நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு பேரணி, மஹாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. நீண்ட காலம் அரசியல் விரோதத்தோடு இருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சகோதரர் ராஜ் தாக்கரே, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர். மும்மொழி கொள்கைக்கு எதிரான இந்த பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்றதோடு, பார்வையாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மஹாராஷ்டிரா பா.ஜ. ஆட்சி 1ம் வகுப்பு முதல் ஹிந்தியை மூன்றாவது மொழியாக வகுப்புகளில் சேர்த்தது. இதை எதிர்த்து பல தரப்பிலும் கண்டனங்கள் கிளம்பியதும், மாநில அரசு அந்த முடிவை வாபஸ் பெற்றது. இந்த சூழ்நிலையை பயன்படுத்த விரும்பிய தாக்கரே சகோதரர்கள், இணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிரான பேரணியை அழைத்தனர். இதுவே அவர்களின் அரசியல் அணிமுகத்தில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியது.
பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில், “சிவசேனா நிறுவனரான பால் தாக்கரேவால் கூட இணைக்க முடியாத இடைவெளியை, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்து விட்டார். எனக்கும் என் சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கும் இந்தச் சூழலில் இணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் ஹிந்தி திணிப்பை எங்களால் ஏற்க முடியாது,” என்றார். மேலும், “மராத்தியைத் தவிர வேறு மொழிக்கு இங்கு தேவையில்லை. ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளன என்பது உண்மை,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
ராஜ் தாக்கரே தொடர்ந்து, “ஹிந்தி என்பது வெறும் 200 ஆண்டுகள் பழமையான மொழி மட்டுமே. மராத்தியரின் பேரரசு இந்தியாவின் பாதி நிலப்பகுதியில் ஆட்சி செய்தபோதும், மராத்தியை மற்ற மாநிலங்களில் திணிக்கவில்லை. ஆனால் இப்போது மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. இது மாநிலங்களுக்கு எதிரான ஒரு சதி,” எனக் குறிப்பிட்டார். இந்த பேரணியில் தாக்கரே சகோதரர்கள் இணைந்தது, மஹாராஷ்டிரா அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.