ஐதராபாத்: உலக அழகி பட்டம் வென்ற தாய்லாந்தை சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீக்கு ரூ.8.50 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக ரூ. 8.50 கோடி, வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது. உலக அழகி ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ சமூக நிகழ்வுகளில் பங்கேற்க உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். அவருக்கு ஆண்டு முழுவதும் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் வசதி கிடைக்கும்.
விலை உயர்ந்த ஒப்பனை கருவிகள், உடைகள், நகைகள் போன்றவை அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். எங்கு சென்றாலும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும். உலக அழகி பட்டம் வென்ற அவருக்கு விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் வழங்கப்பட்டது.
கிரீடத்தின் ஒவ்வொரு அம்சமும் உலக அழகி போட்டியின் முக்கியத்துவத்தையும் பெண்களின் சக்தியையும் பிரதிபலிக்கிறது. தற்போதைய கிரீடத்தின் மதிப்பு தோராயமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.85.56 லட்சம் ஆகும். இது 4-வது உலக அழகி கிரீடம் ஆகும். கிரீடங்கள் மிகிமோட்டோ என்ற ஜப்பானிய நகை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது பயன்பாட்டில் உள்ள கிரீடம் 2017-ல் வடிவமைக்கப்பட்டது. இந்த கிரீடம் ஒருபோதும் வெற்றியாளருக்குச் சொந்தமாகாது. அடுத்த ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தற்போதைய உலக அழகி கிரீடத்தை அணிவிப்பார்.