பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் நாராயண் கணேஷ் காமத், 1992-93ம் ஆண்டுகளில் சிக்கோடியில் துாத்கங்கா ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையை கட்டும் பணியை சிறிய நீர்ப்பாசனத் துறையில் மேற்கொண்டார். அதிகாரிகள் சிமென்ட் விநியோகத்தில் தாமதம் செய்ததால், தனது சொந்த செலவில் சிமென்ட் வாங்கி பணியை முடித்தார். ஆனால் அதற்கான பில் தொகையான ரூ.34 லட்சம் அவருக்கு இரண்டாண்டுகள் கழித்தும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையை எதிர்த்து 1995ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், 15 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த வழக்குப் பின்னர் தனது பில் தொகையை வழங்க வேண்டும் என மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து உத்தரவை பெற்றார். இதைத் தொடர்ந்து நீர்ப்பாசனத் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2024ல், கேரள உயர்நீதிமன்றம் 9% வட்டியுடன் ரூ.1.31 கோடி வழங்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, இன்னும் நிதி வழங்கப்படவில்லை என மனுதாரர் மீண்டும் முறையிட்டார். இதனையடுத்து, நீதிமன்றம், 50% கூடுதல் வட்டியுடன் பணம் வழங்க ஜூன் 2க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்தது. கூடவே, செயலர், கலெக்டர் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் மீது நேரடி பொறுப்பும் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் உத்தரவை மீண்டும் கடைபிடிக்காததால், மனுதாரரின் வழக்கறிஞர் ஜோஷியின் தலைமையில், நீதிமன்ற ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த கலெக்டரின் காரை நேரடியாக ஜப்தி செய்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி, அரசு நிர்வாகத்துக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ளது.