புதுடில்லி: டில்லியில் நேற்று பெய்த ஒரு நாள் மழையே, தலைநகரை தள்ளாட்ட நிலைக்கு கொண்டு சென்றது. மழை காரணமாக சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி, மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அதிகாலை முதல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், ஒரு கி.மீ தூரம் செல்லவே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக்கொண்டது.
பருவமழை முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலை வரை தொடர்ந்த மழை, வெறும் சில மணி நேரத்தில் நகர வாழ்க்கையை சீர்குலைத்தது. பெரும்பாலான இடங்களில் அலுவலகம் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளிலேயே தவித்தனர்.

ஐ.டி.ஓ., ஓல்ட் ரோடக் சாலை, டில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, மதுபான் சவுக் ஆகிய இடங்களில் போக்குவரத்து மிகுந்த நெரிசலை சந்தித்தது. வடிகால்கள் செயலிழந்ததால், சாலைகள் குளங்களாக மாறின.
ஷாதிபூர் பகுதியில் வாகனங்கள் பம்பர்-டூ-பம்பர் என சிக்கியது. ஒரு கி.மீ. தூரம் நகரவே மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாடுபட்டனர். நங்லோய், நஜப்கார், முண்ட்கா ஆகிய வழித்தடங்களில் மழைதான் நெடுஞ்சாலை என்று தெரியவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்.
ராஜோக்ரி, மஹிபால்பூர், ஜாஹிரா சுரங்கம் போன்ற இடங்களில் சாலைகள் முற்றாக நீரில் மூழ்கி, வாகனங்கள் பிற பாதைகளுக்குத் திருப்பப்பட்டன. தெற்கு டில்லியின் எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனை, ஆஸ்ரம் பகுதிகளிலும் போக்குவரத்து மிகுந்த பாதிப்பை சந்தித்தது.
மழை பாதிப்பால் அவதியுற்ற மக்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்டு தங்கள் நிலையை வெளிப்படுத்தினர். சிலர் பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு தங்கள் வழிகளில் நிலமை எப்படியென்று விசாரிக்க நேர்ந்தது.
இத்தனைப் பெரிய பாதிப்புக்கிடையே, டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்ட அறிக்கையில், “நகரில் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை” என பெருமிதம் தெரிவித்தார். பாராபுல்லா, குஷாக் டிரைன், மின்டோ பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் துளி கூட தேங்கவில்லை என்ற அவர், பா.ஜ. அரசு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
இதற்குப் பதிலாக, மக்கள் அவரது உரையை எதிர்வினையாக ஏற்றுள்ளனர். “ஐ.டி.ஓ. உள்ளிட்ட இடங்களில் நிலைமை மோசமாக இருந்தது. மக்களுக்கு நேர்ந்த அவதி தரையில் தெரியாமல் மேலிருந்து எப்படி தெரியும?” என மக்கள் கேள்வி எழுப்பினர். மழைக்கு எதிரான திட்டமிடல் இன்றியமையாதது என்பதே இந்த மழை நகரத்திற்கு உணர்த்திய பாடமாக அமைந்துள்ளது.