புதுடில்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். பாஜக அரசு அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். சவுரவ் பரத்வாஜ் வீட்டில் சோதனை நடத்தி, வாக்குமூலம் அளிக்க அழுத்தம் தந்ததாகவும், அவர் துணிவுடன் எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டார். அதேசமயம் ராபர்ட் வாத்ரா தொடர்பான வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காங்கிரசும் பாஜகவும் ரகசிய உடன்பாட்டில் செயல்படுகின்றன என்றும் அவர் சாடினார். மக்கள் முட்டாள்கள் அல்ல, உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.
டில்லியில் பாஜக ஆட்சி வந்த பின்பு மின்சார தடைகள் அதிகரித்துள்ளன, கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன, சாலைகள் சேதமடைந்துள்ளன என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள், குடிசை இடிப்புகள், ஏழைகளின் துன்பங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மி அரசு வழங்கிய இலவச மின்சாரம் கூட பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மக்கள் பணியில் தன்னலமின்றி ஈடுபட வேண்டும் என்று தனது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அடுத்த தேர்தலில் மக்கள் மீண்டும் ஆம் ஆத்மியையே தேர்ந்தெடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் டில்லி முன்னேற்றம் கண்டதாகவும், பாஜக ஆட்சியில் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.