புதுடெல்லி: பாரம்பரிய மருத்துவம் மற்றும் செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கு அகஸ்திய முனிவரின் பங்களிப்பு இந்த ஆண்டு காசி தமிழ் சங்கத்தில் கொண்டாடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கத்தின் 3-வது ஆண்டு விழா இன்று தொடங்குவதையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “காசி தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பு வாரணாசியில் நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மகா கும்பமேளாவின் போது இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதால், இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தமிழகத்திற்கும் காசிக்கும் காவிரிக்கும் கங்கைக்கும் இடையே உள்ள நீடித்த தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. முந்தைய இரண்டு பதிப்புகளின் போது மக்களின் இணக்கமான உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், இரு பிராந்திய மக்களிடையே உள்ள வலுவான பிணைப்பையும் வெளிப்படுத்தின. காசி தமிழ்ச் சங்கம் அத்தகைய நினைவுகளை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.
மக்கள் முழு மனதுடன் பங்கேற்பதன் மூலம், இந்த சங்க நிகழ்வுகள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஏற்படுத்தும். பாரம்பரிய மருத்துவம் மற்றும் தமிழ் பாரம்பரிய இலக்கியத்திற்கு அகஸ்திய முனியின் பங்களிப்பு இந்த ஆண்டு விழாவில் கொண்டாடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பங்கேற்பாளர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்பதையும், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கும் செல்வார்கள் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இதுபோன்ற ஆன்மீகத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறிச் செல்லும் போது, காசி தமிழ்ச் சங்கம் போன்ற முயற்சிகள் நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதிலும் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் முன்னோடியாக இருக்கும். “தமிழகத்தில் இருந்து காசிக்கு பயணம் செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.