சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் பாரம்பரிய முறையை பின்பற்றி ஒரு பெண்ணை இரு சகோதரர்கள் திருமணம் செய்துள்ள சம்பவம் வியப்பையும் ஆர்வத்தையும் எழுப்பியுள்ளது. ஹட்டி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுனிதா சவுஹான் என்பவர், பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி ஆகிய இரு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வு அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் முழுமையான சம்மதத்துடன் நடந்துள்ளது.
இந்த திருமணம் கடந்த ஜூலை 12 முதல் 14ஆம் தேதி வரை, சிர்மவுர் மாவட்டத்தில் உள்ள ஷில்லாய் கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஹட்டி இனத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர். மணமகன்களில் ஒருவர், பிரதீப் நேகி அரசு பணியில் செயல்படுகிறார். அவரது சகோதரர் கபில் நேகி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இருவரும் தங்களது குடும்ப ஆசையின் பேரில் ஒரே பெண்ணை திருமணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்டி இனத்தில் இது போன்ற திருமணங்கள் “ஜோடிதரன்” அல்லது “திரவுபதி பிரதா” என அழைக்கப்படுகின்றன. இந்த வழக்கமான திருமண முறையை மலைப்பகுதி சமூகங்கள் நெடுங்காலமாக கடைப்பிடித்து வருகின்றன. இம்முறையின் மூலம், குடும்ப சொத்துக்கள் பலவாகப் பிரியாமல் ஒரே குடும்பத்தில் நிலைத்திருக்கும்படி பாதுகாக்கப்படும். மேலும், கணவனை இழந்த நிலையிலோ, தனிமையில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகாத வகையில் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என அந்த சமூகத்தின் மூத்தோர் விளக்குகிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் ஹட்டி இன மக்களுக்கு இந்திய அரசால் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த சமூகத்தில் நடக்கும் வித்தியாசமான கலாசார நிகழ்வுகள் மேலும் வெளிக்கொணரப்படுகின்றன. ஒரே பெண்ணை இரு சகோதரர்கள் திருமணம் செய்த சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.