மாண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில், பாஜகவைச் சேர்ந்த ஹிமாச்சல முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் .பயணித்த கார் அதிர்ஷ்டவசமாக தப்பியதுடன், அவர் உயிர் பாதுகாப்பாக மீண்டார்.
பருவமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மேகவெடிப்பு, நிலச்சரிவு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாண்டி மாவட்டத்தில் மட்டும் 249 சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் ஜூலை 18 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெய்ராம் தாகூர் செராஜ் பகுதியில் இருந்து துனாக் நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஷங்கர் டெஹ்ரா பகுதியில் கற்கள் உருண்டு விழுந்தன. உடனே காரை விட்டு இறங்கிய அவர், பாதுகாப்பான இடத்துக்கு சென்றதால் உயிர்தப்பினார். இந்த சம்பவம், மாநில அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழை காரணமாக ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவுகள் மாநிலத்திற்கே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.