ஒடிஷாவில் 20,000 கிலோ வரை தங்கம் கிடைக்கும் சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனிமவள ஆய்வுகள் நடைபெற்றபோது, தியோகர், சுந்தர்கர், நபாரங்பூர், கியோன்ஜார், அங்குல் ஆகிய பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மயூர்பன்ஞ், மல்கன்கிரி, சாம்பல்பூர், பவுத் போன்ற இடங்களில் சுரங்கங்கள் தோண்டி தங்கம் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதை மாநில சட்டசபையில் சுரங்கத் துறை அமைச்சர் விபூதி பூஷண் ஜெனா உறுதிப்படுத்தினார்.
தங்கச் சுரங்கங்களில் இருந்து எவ்வளவு அளவு தங்கம் எடுக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் 20,000 கிலோ வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியா 7 முதல் 8 லட்சம் கிலோ தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அதனை ஒப்பிடுகையில், இந்த சுரங்கங்கள் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்றாலும், பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
ஏற்கனவே ஒடிஷா, குரோமைட், பாக்ஸைட் மற்றும் இரும்புத் தாதுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தங்கமும் சேர்க்கப்பட்டால், அந்த மாநிலம் கனிமவள ஏற்றுமதியில் முக்கியமான இடத்தை பிடிக்கும். கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் 121 ஆண்டுகளில் 10 லட்சம் கிலோ தங்கம் எடுக்கப்பட்டதை ஒப்பிடுகையில், ஒடிஷாவின் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.