பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து 2-வது முறையாக புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார். அவர் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வந்திருந்தார். அவர் தனது தாய், மனைவி மற்றும் மகனுடன் இங்கு புனித நீராடினார்.
இதைத் தொடர்ந்து, அகடா துறவிகள் சார்பில் முதல்வர் தாமிருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆச்சார்யா மஹா மண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்த் கிரி, “உத்தரகாண்ட் போன்ற ஆன்மீக பூமி உலகில் எங்கும் இல்லை. அதன் தலைவர் தாமி, என்னை போன்ற அனைத்து புனிதர்களின் இதயத்தையும் கவர்ந்தவர். உத்தரகாண்ட் சிறிய மாநிலமாக இருந்தாலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் இதுவாகும்.
இதற்காக அமைக்கப்பட்ட குழுவும் முக்கிய துறவிகளை அணுகி கருத்துகளை கேட்டது பாராட்டுக்குரியது” என்றார். விழாவில் ஏற்புரை ஆற்றிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “சனாதனத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் அதிகம் உள்ள பெரிய மாநிலம் உத்தரகாண்ட். இந்த தாக்கத்தால் தான் பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்தியுள்ளோம். பிரதமரின் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்‘ கொள்கைக்கு இதுவும் உதாரணமாக உள்ளது. 2027-ல் ஹரித்வாரில் கும்பமேளாவை பிரம்மாண்டமாக நடத்துவோம். அவரும் அவரது குடும்பத்தினரும் புனித நீராடும் புகைப்படங்களை முதல்வர் தாமி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.