
கடுமையான கோடை வெயிலில் மக்களுக்கு ஏசி என்பது தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது. வீடுகளில் மட்டுமின்றி அலுவலகங்கள், ஹோட்டல்கள், வாகனங்கள் என பல இடங்களில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. சிலர் 16°C வரை வெப்பநிலையை குறைத்து இயக்குகின்றனர். இந்த நேரத்தில் அதிக மின் பாவனை ஏற்படுவதால் மின்தடை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு 20°C-க்கும் கீழே ஏசியை அமைக்க முடியாத விதிமுறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் மின்சாரத்தை சேமிப்பது மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கட்டுப்படுத்துவது. மின்சார அமைச்சர் மனோஹர் லால் கட்டார் இதை உறுதிப்படுத்தினார். இது அனைத்து வகை ஏசி சாதனங்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையின் பயனாக, ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் ஏசி இயங்கினால் 6% வரை மின்சாரம் சேமிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏற்கனவே 100 மில்லியன் ஏசி-க்கள் உள்ளன. ஆண்டுதோறும் 15 மில்லியன் ஏசி கூடுதலாக விற்பனை ஆகின்றன. இதனால், சிறிய மாற்றங்களும் பெரிய அளவில் மின்சார சேமிப்பை ஏற்படுத்தும்.
இதன்மூலம் கோடை பருவங்களில் உச்ச அளவில் இருக்கும் மின் தேவை குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த வருடம் 250 ஜிகாவாட் வரை மின் பயன்பாடு இருந்த நிலையில், இந்த ஆண்டு 270 ஜிகாவாட் எட்டும் என கணிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், மின்சாரத்தின்மை ஏற்படாமல் தடுக்கும் முக்கிய முயற்சியாக அமையும்.