அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியுள்ள தகவல், விமானப் பயணத்தின் போது பாதுகாப்பான இருக்கை குறித்து விவாதங்களை கிளப்பியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த பயணத்தில் விஸ்வாஸ் குமார் என்பவர் 11A என்ற இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் மட்டுமே உயிருடன் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வர, அவர் அமர்ந்திருந்த இருக்கை அதிக கவனத்தை பெற்றுள்ளது. இது, பாதுகாப்பான இருக்கைகள் பற்றிய ஆராய்ச்சிகளையும் மீண்டும் பொதுமக்கள் மனதில் கொண்டு வந்திருக்கிறது.

2015ஆம் ஆண்டு டைம் இதழில் வெளியான ஒரு அறிக்கையின்படி, விமானத்தின் கடைசி பக்கத்தில் இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கைகள் குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான காரணம் விபத்தின்போது விமானத்தின் முன் பகுதி தான் அதிகம் சேதமடைவதாகும். இதன் அடிப்படையில், பின்புறம் அமர்ந்திருப்பவர்களுக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு 40% அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடு இருக்கைகளும் கூட குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. இதற்கான காரணம், விமானம் விபத்துக்குள்ளானால், பக்கவாட்டில் அமர்ந்திருப்பவர்களைவிட நடுப்புறம் இருக்கும் பயணிகளுக்கு நேரும் தாக்கம் சற்று மிதமாக இருக்க வாய்ப்பு உள்ளது. முன் பகுதி, பக்கங்கள் ஆகியவை நேரடி தாக்கத்திற்கு உள்ளாகும் என்பதால் அதிக ஆபத்தான பகுதிகள் எனக் கருதப்படுகிறது.
இவற்றால், விமான விபத்துகளின் போது பின்புறம் மற்றும் நடுப்பகுதியில் இருக்கையின் பாதுகாப்பு அதிகம் என ஆய்வுகள் கூறினாலும், எல்லா விபத்துகளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு விபத்தும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், பாதுகாப்பு பற்றிய தகவல்கள் பொதுவான வழிகாட்டுதல்களாகவே பார்க்கப்பட வேண்டும்.
இந்த சம்பவம் விமானப் பயணங்களில் பாதுகாப்பு குறித்து மேலும் சிந்திக்கவைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. விமான பயணத்தில் இருக்கை எண் முக்கியத்துவம் வாய்ந்ததா என்பதையும், அவற்றின் அமைப்பும் பயணிகளின் பாதுகாப்பை எவ்வளவு பாதிக்க முடியும் என்பதையும் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யும் தேவை எழுந்துள்ளது.