புதுடில்லியில் நடைபெறும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் நீண்ட கோரிக்கைக்கு இணங்க, ‘பஹல்காம் தாக்குதல்’ மற்றும் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தொடர்பான சிறப்பு விவாதம் இன்று லோக்சபாவில் நடைபெற உள்ளது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் குரலை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இந்த விவாதம், கடந்த வாரங்களாக முடங்கிய பார்லிமென்ட் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தும் எண்ணத்துடன் நடைபெறுகிறது.

மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உரிய நேரம் ஒதுக்கப்படும் என முன்பே அறிவித்திருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால்தான் இன்றைய விசேஷ விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆப்ரேஷன் சிந்துார்’ மட்டும் அல்லாமல், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்த அறிக்கைகள், பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பேச உள்ளன.
இன்றைய விவாதம் சுமார் 16 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கமளிக்க உள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பார்லிமென்டில் பெரும் பரபரப்பையும், தத்ரூபமான விவாதத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பான விவகாரம் நாளை ராஜ்யசபாவிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் இந்த காரசார விவாதம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் தீர்மானமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.