புதுடில்லி செய்தி: வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபித்துள்ளவர் பிரஞ்சலி அவஸ்தி. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இவர், 16 வயதிலேயே Delv.AI என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கினார். தற்போது 18 வயதாகும் அவரின் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பை எட்டியுள்ளது. இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக அவர் திகழ்கிறார்.

பிரஞ்சலி அவஸ்தியின் சிறுவயதிலிருந்தே தொழில்நுட்பத்தில் இருந்த ஆர்வம் அவரை வெற்றிக்கு கொண்டு சென்றது. 7 வயதில் கோடிங் கற்றுக் கொண்ட அவர், 13 வயதில் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அதன்பின் 16 வயதில் தனது சொந்த நிறுவனத்தை ஆரம்பிக்க தன்னம்பிக்கை பெற்றார். தற்போது Dash எனும் புதிய ஏஐ கருவியை உருவாக்கி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பின்னால் அவரது தந்தையின் ஊக்குவிப்பு முக்கிய பங்காற்றியது. 11 வயதில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு கணினி பொறியாளரான தந்தையிடம் கற்றுக் கொண்டு தனது கனவுகளை வளர்த்தார். பள்ளிப் பருவத்திலேயே கணினி அறிவியலில் அதிக ஆர்வம் கொண்ட அவர், புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வகத்தில் பயிற்சி பெற்று தனது திறமையை மேம்படுத்திக் கொண்டார்.
Delv.AI என்பது ஏஐ அடிப்படையிலான தளம். PDFகள் மற்றும் பிற ஆவணங்களில் இருந்து தகவல்களை எளிமையாக கண்டறியவும் சுருக்கமாக பகிரவும் இது உதவுகிறது. உலகளவில் தொழில்நுட்ப துறையில் பெண்கள் தங்கள் பங்களிப்பை அதிகரிக்கும் காலத்தில், பிரஞ்சலி அவஸ்தியின் சாதனை ஒரு முக்கிய முன்னுதாரணமாகும். இந்தியாவின் புதிய தலைமுறைக்கு அவர் ஒரு “ரோல் மாடல்” எனப் பார்க்கப்படுகிறார்.