புதுடெல்லி: என்ஆர்ஏ எனப்படும் தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தேர்வை கூட நடத்தாதது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 2020ல் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு என்ஆர்ஏ வரப்பிரசாதமாக இருக்கும்.
இது வெளிப்படைத்தன்மைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக 3 கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
* NRA எனப்படும் தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு தேர்வைக்கூட நடத்தாதது ஏன்?.
* என்.ஆர்.ஏ.வுக்கு ரூ.1,517.57 கோடி வழங்கப்பட்டு, 4 ஆண்டுகளில் ரூ.58 கோடி மட்டுமே செலவிடப்பட்டது ஏன்?
* NRA அரசு வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதற்காக என்ஆர்ஏ வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யப்பட்டதா?
பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் கல்வி முறையை அழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள். என்ஆர்ஏ பிரச்சினையை நாங்கள் முன்பு எழுப்பியுள்ளோம். ஆனால் பாஜக அரசு மவுனம் காக்கிறது. இவ்வாறு கார்கே கூறினார்.