திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா நேற்று காலை தொடங்கியது. வருடாந்திர பிரம்மோற்சவத்தில் வரும் வாகனங்களில் நேற்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்படி, முதலில் காலை 5.30 மணிக்கு மலையப்பசுவாமி சிவப்பு மாலை, பட்டு வஸ்திரம், தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து 7 குதிரைகள் இழுக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வந்தார்.
பின்னர் 4 மாட வீதிகளில் வலம் வந்து வடமேற்கு திசையில் உள்ள மாட வீதிகளில் சூரிய உதயத்திற்காக காத்திருந்தார். காலை 6.50 மணிக்கு சுவாமி மீது சூரிய ஒளி படர்ந்ததும் சூரியனுக்கும், மலையப்ப சுவாமிக்கும் கற்பூர ஆரத்தி நடந்தது. அப்போது, மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மலையப்ப சுவாமி, சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் அடுத்தடுத்து வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதியம் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மதியம் கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபா வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமலையில் ஒரே நாளில் 7 வாகனங்களில் வீதி உலா வரும் மலையப்ப சுவாமியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.