சென்னை: ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் நோக்கில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. வீடு, மனை விற்பனையில் வெளிப்படும் சிக்கல்களைத் தீர்க்க 2016 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் மாநில அரசுகள் தனித்தனி விதிகளை உருவாக்கின.

இதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒழுங்குமுறை விதிகளில் வேறுபாடுகள் காணப்பட்டன. உதாரணமாக, வீட்டை ஒப்படைக்க தாமதித்தால், ஹரியானாவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பிற மாநிலங்களில் அதே அளவிலான கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது.
சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் மாநாட்டில், விதிமுறைகளை ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும் என்பதில் ஆலோசனை நடைபெற்றது. தமிழக விதிகளை பல மாநிலங்கள் பின்பற்றுவதாகவும், மேலும் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்த இணைய தளத்தில் திட்டங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், நாடு முழுவதற்கும் ஒரே விதமான ஒழுங்குமுறை விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பாதுகாப்பு அதிகரித்து, ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.