ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இன்னும் இந்திய மக்களின் மனங்களில் அடையாளமாய் நின்றுகொண்டிருக்கிறது. அந்தச் சம்பவம் ஏற்படுத்திய உணர்வுப்பூர்வ அதிர்ச்சி அளவிட முடியாத ஒன்று. அத்தகைய தாக்குதலில் ஒரே மண்ணில் பிறந்த இருவரில் ஒருவர் உயிரைக் கொடுத்தவர்; இன்னொருவர், உயிர்களை அழித்தவர். இது தான் இந்தக் கதையின் மூலதனம்.

பஹல்காமில் குதிரை ஓட்டி வழிகாட்டியாக பணியாற்றிய சையத் ஆதில் உசேன் ஷா, அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பணியில் தினசரி ஈடுபட்டிருந்தார். அவருடைய வருமானம் நாள் ஒன்றுக்கு சுமார் 300 ரூபாய் மட்டுமே. அதில்தான் அவரது குடும்பம், வயதான பெற்றோர், மருந்து செலவுகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், பிறர் உயிரைப் பாதுகாக்கும் மனப்பான்மையை கொண்டிருந்தவர்.
அந்தப் பயங்கரவாத தாக்குதலின் போது, பயந்தோடி ஒளியாமல் எதிர் நின்ற சையத் ஆதில் உசேன் ஷா, ஒரு பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது தாக்கி கொல்லப்பட்டார். அவருடைய இறப்பு அவரது குடும்பத்தை கண் கலங்கச் செய்தாலும், நாட்டிற்காக அவர் செய்த தியாகம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பெருமையை தூண்டியுள்ளது. அவரது வீர மரணத்திற்கு பிரதமர் உள்பட பலர் மரியாதை செலுத்தியதுடன், அவரது குடும்பத்துக்கு அரசு உதவியும் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலின் மற்றொரு பக்கம், அதே மண்ணைச் சேர்ந்த ஆதில் உசேன் தோக்கர். இவர் பிஜ்பெஹாரா அருகேயுள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர். 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இவர், அங்கு பயங்கரவாத பயிற்சி பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உள்நாட்டுப் பயங்கரவாதிகளுக்கான வழிகாட்டியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்புலமாகக் கருதப்படும் ஆதில் உசேன் தோக்கர், பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஹாஷிம் மூசா மற்றும் அலி பாய் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, அவரைத் தேடிய இந்திய ராணுவம் இன்று அவரது வீடில் தாக்குதல் நடத்தி அதை அழித்துள்ளது. அவ்வீடு குண்டு வைத்து தகர்த்தது, நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கடுமையான நடவடிக்கையாகும்.
ஒரே பெயரையும் ஒரே மண்ணையும் பகிர்ந்த இருவர். ஆனால், ஒருவர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்; மற்றொருவர் நாட்டு மக்களை அழிக்க முயன்றார். சையத் ஆதில் உசேன் ஷாவின் வீர மரணம், சமூகத்தின் மனங்களில் இடம் பிடித்திருப்பதே இல்லை, அவரது பெயரால் நாட்டின் வரலாற்றிலும் பதிந்திருக்கிறது.இன்டர்நெட் உலகில் இந்த இருவரின் வாழ்க்கைக் கதைகள் தற்போது பரவி, பலரது நெஞ்சையும் பதறவைத்துக் கொண்டிருக்கின்றன.