உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், வனவிலங்குகள், குறிப்பாக சிறுத்தைகள் அவ்வப்போது வலம் வரும் சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகி உள்ளன. சில நேரங்களில், இவ்வகை விலங்குகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளது.
அண்மையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஜூ பார்க் சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரை சாலையோரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென தாக்க முயன்றது. அந்த இருவரும் வேகமாக பயணித்ததால், சிறுத்தையின் தாக்குதலிலிருந்து நொடி நேரத்தில் தப்பினர். ஆனால் பின்புறத்தில் அமர்ந்திருந்தவர் அந்தச் சிறுத்தையை நேரில் பார்த்ததால் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவம், பின்னால் வந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, திருப்பதி மலை பாதையை ஏறுவோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த திடீர் வனவிலங்கு தாக்குதலால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மலைப்பாதையில் பயணிக்கும் பக்தர்களும், பொதுமக்களும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.